×

கோடை வெயிலுக்கு இதமாக தாமிரபரணியில் குளிக்க குவியும் சிறுவர்கள்-நீர்வரத்து வெகுவாக குறைந்தது

நெல்லை : கோடை வெயிலுக்கு இதமாக குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில் சிறுமிகள் குளித்து கும்மாளமிட்டனர்.நெல்லை மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், சிறுவர்கள் வெயில் தாக்கத்தால் வெளியில் செல்ல முடியாமல் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக நெல்லையில் கோடை மழை பெய்தது. இதனால் கோடை வெயிலுக்கு இதமாக இருந்தது.

மேலும் கடந்த ஆண்டு பருவமழை சரிவர பெய்யாத நிலையில் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது. இதனால் நெல்லை மாநகர பகுதிகளில் பல இடங்களில் குடி தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது. பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை என் குற்றச்சாட்டு உள்ளது. ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீரில் மட்டம் அதளபாதாளத்துக்கு சென்று விட்டது. கால்வாய்களிலும் தண்ணீர் அடைக்கப்பட்டுள்ளது. அணைகளில் நீர்மட்டம் குறைந்துள்ளதால் தாமிரபரணியில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. இதனால் ஆற்றில் சிறிதளவே ஓடும் தண்ணீரில் மூழ்கி குளிக்க முடியாத சிறுவர்கள் வீடுகளிலிருந்து எடுத்து வரும் கோப்பையை பயன்படுத்தி குளித்து மகிழ்கின்றனர்.

இதன்காரணமாக பொதுமக்கள் குளிக்க தாமிரபரணி ஆற்றுக்கு காலையில் படையெடுக்கின்றனர். இதில் நெல்லை மாவட்டம் பாபநாசம், அம்பாசமுத்திரம் சின்னசங்கரன்கோவில், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், தருவை, முன்னீர்பள்ளம், மேலநத்தம், கருப்பந்துறை, குறுக்குத்துறை, பேராத்து செல்வி அம்மன் கோயில் படித்துறை, சிந்துப்பூந்துறை படித்துறை உள்ளிட்ட தாமிரபரணி ஆற்றங்கரை படித்துறைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதில் கோடை விடுமுறையில் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ள சிறுவர்கள் தாமிரபரணி ஆற்றில் குடும்பத்தினருடன் வந்து குளித்து கும்மாளமிடுகின்றனர்.

The post கோடை வெயிலுக்கு இதமாக தாமிரபரணியில் குளிக்க குவியும் சிறுவர்கள்-நீர்வரத்து வெகுவாக குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Copper River ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...